சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனது முதல் தேர்தல் களத்திலேயே ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. கட்சிக்கு ‘விசில்’ சின்னம் கிடைத்துள்ளது ஒரு பக்கம் என்றால், அது “பொதுச் சின்னம்” (Common Symbol) ஆகக் கிடைத்திருப்பது அந்தத் தரப்பை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விதி 10B: தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) ஆணை 1968, விதி 10B-ன் படி, ஒரு அங்கீகாரம் பெறாத கட்சி ஒரு மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளில் குறைந்தபட்சம் 5% இடங்களில் போட்டியிட்டால், அவர்களுக்கு ஒரு பொதுவான சின்னத்தை ஒதுக்கத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும்.
குழப்பத்திற்கு இடமில்லை: வழக்கமாகச் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் சிறிய கட்சிகளுக்குத் தொகுதிக்குத் தொகுதி சின்னம் மாறும். ஆனால், தவெக 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதால், மாநிலம் முழுவதும் ஒரே சின்னமான ‘விசில்’ சின்னத்திலேயே போட்டியிடலாம். இதன் மூலம் வாக்காளர்கள் மத்தியில் சின்னத்தைக் கொண்டு சேர்ப்பது எளிதாகும்.
நவம்பர் விண்ணப்பம்: கடந்த நவம்பர் மாதம் தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் ‘விசில்’, ‘ஆட்டோ’, ‘மட்டைப்பந்து’ உள்ளிட்ட 10 விருப்பச் சின்னங்கள் வழங்கப்பட்டன. அதில் முதல் விருப்பமான ‘விசில்’ சின்னத்தையே தேர்தல் ஆணையம் தற்போது உறுதி செய்துள்ளது.
விஜய்யின் மாஸ்டர் பிளான்: பொதுவாகப் புதிய கட்சிகள் சின்னம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு, தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்புதான் சின்னம் உறுதியாகும். ஆனால், விஜய் தரப்பு முன்கூட்டியே திட்டமிட்டு, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பொதுச் சின்னத்தை வாங்கியிருப்பது, அவர்களின் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது.





