வாண வேடிக்கை இல்லை.. ஏவுகணைச் சத்தம் தான்!! உக்ரைனில் களையிழந்த 2026 புத்தாண்டு!!

ukraine-new-year-2026-celebrations-

உலகமே 2026-ம் ஆண்டை வண்ணமயமான வாண வேடிக்கைகளுடனும், இசையுடனும் வரவேற்றுக் கொண்டிருக்கும் வேளையில், உக்ரைன் நாட்டில் மட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிகுந்த சோகத்துடனும், பயத்துடனும் கடந்து போயுள்ளன. 2022 பிப்ரவரி மாதம் தொடங்கிய போர், தற்போது 1,400 நாட்களைக் கடந்து 4-வது ஆண்டாக நீடிப்பதால் உக்ரைன் மக்கள் கொண்டாட்டங்களை முற்றிலும் மறந்துவிட்டனர்.

இருளில் மூழ்கிய நகரங்கள்: ரஷ்யாவின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால் உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்பு (Power Grid) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் கைவ் (Kyiv) உட்படப் பல நகரங்களில் உறைபனி குளிரிலும் மக்கள் மின்சாரம் இல்லாமலேயே புத்தாண்டைக் கழித்துள்ளனர். மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும், செல்போன் டார்ச் வெளிச்சத்திலும் தங்களது குடும்பத்தினருடன் மிக எளிமையாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

ஜெலென்ஸ்கியின் நெஞ்சை உருக்கும் உரை: புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “அமைதி ஒப்பந்தம் 90% தயாராகிவிட்டது, மீதமுள்ள 10% தான் சவாலாக உள்ளது. எங்களுக்குப் போர் முடிவுக்கு வர வேண்டும், ஆனால் உக்ரைன் அழிவதை நாங்கள் விரும்பவில்லை” என உருக்கமாகத் தெரிவித்தார். மேலும், 1400 நாட்களாகப் போர்க்களத்தில் நிற்கும் வீரர்களை ‘ரியல் ஹீரோக்கள்’ எனப் பாராட்டிய அவர், 2026-ல் எப்படியாவது அமைதி திரும்பும் என நம்பிக்கை அளித்தார்.

மக்களின் ஒரே விருப்பம்: புத்தாண்டு என்றாலே கேக் வெட்டுவது, புத்தாடை அணிவது என இருந்த காலம் போய், “இன்று ஒரு ஏவுகணைத் தாக்குதல் கூட நடக்கக்கூடாது”, “சத்தம் இல்லாத உறக்கம் வேண்டும்” என்பதே உக்ரைன் மக்களின் ஒரே புத்தாண்டு வேண்டுதலாக மாறியுள்ளது. விஷ்ஹோரோட் போன்ற புறநகர்ப் பகுதிகளில் நான்கு நாட்கள் தொடர் மின்வெட்டுக்குப் பிறகு புத்தாண்டு அன்றுதான் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் ரஷ்ய அதிபர் புதின் “வெற்றி நமதே” என முழங்க, மறுபுறம் உக்ரைன் மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram