பிப்ரவரி 25 (நேற்று) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை சித்ரா விமான நிலையம் வந்து அடைந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த நிர்வாகி பொன் ராதாகிருஷ்ணன், மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழிசை மற்றும் வானதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று உள்ளனர். விமான நிலையத்திலிருந்து அவர் தங்கும் விடுதிக்கு செல்லும் வழி எங்கும் பாஜக தொண்டர்கள், சாலையில் இருபுறம் நின்று அவர் வரும் காரின் மீது மலர்களை தூவி கோலாகலமாக வரவேற்றுள்ளனர். அவர் முக்கியமாக ஈஷா யோகா மஹா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே தான் அவர் கோவை வந்து அடைந்துள்ளார்.
இன்று (பிப்ரவரி 26) காலை பீளமேட்டில் தொடங்கப்பட்டுள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தை தொடங்கி வைக்கப் போகிறார். அதனைத் தொடர்ந்து கட்சியின் மூத்த உறுப்பினர்களோடு ஆலோசனை நடத்த போவதாகவும், அவருக்காக சித்ரா ஏர்போர்ட் முதல் பீளமேடு, நவஇந்தியா (அவர் தங்கும் விடுதி உள்ள இடம்) மற்றும் ஈஷா யோகா மையம் ஆகியவற்றிற்கு கூடுதல் பாதுகாப்பு பணிகள் நியமிக்கப்பட்டுள்ளன. இன்று இரவு ஈஷா யோகா மஹா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க போகிறார். இவர் வருகையை தொடர்ந்து தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகளை எடுத்துக் கூறியும், நிதி ஒதுக்கீடு குறித்தும் கலந்தாலோசிக்க போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.