TAMILNADU: தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விண்ணப்ப பதிவுக்கான தேதி 27.5.2025 அன்று நிறைவடைந்த நிலையில், மேலும் 3 நாட்கள் மே 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது. அரசு கல்லூரிகளில் இதுவரை 2,25,705 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 1,82,762 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். மாணவர்கள் விண்ணப்பங்களை வீட்டிலிருந்து அல்லது, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உருவாக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில் புதிய அரசு கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு மாணவர்களுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி பயில விரும்பும் கிராமப்புற மாணவர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பதாவது, 2025-26 கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.
இந்த புதிய கல்லூரிகள் வேலூர் மாவட்டம் (கேவி குப்பம்), திருச்சி மாவட்டம் (துறையூர்), கள்ளக்குறிச்சி மாவட்டம் (உளுந்தூர் பேட்டை), மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் (செங்கம்) ஆகிய இடங்களில் அமையும். இந்த அறிவிப்பால் கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது ஒரு கனவு அல்லாமல் நிஜமாகும். அரசின் இந்த முயற்சி மாணவர்களுக்கு கல்வி சுதந்திரம் வழங்கும் என்பதை முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதன்மூலம், மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்க்கும் புதிய வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி அரசு கவலைக்கொள்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும். இந்த கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டால், மாநிலத்தின் கல்வி தரம் உயர்ந்து மாணவர்களின் எதிர்கால வாய்ப்புகளும் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.