அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இயங்கும் பிரபல டார்கெட் சூப்பர் மார்க்கெட்டில், இந்திய பெண் ஒருவர் திருட்டுச் செயலில் சிக்கியுள்ளார். கிட்டத்தட்ட 7 மணி நேரமாக கடையில் சுற்றி, 767 பொருட்களை ட்ராலியில் எடுத்து வெளியே செல்ல முயன்ற அந்த பெண், அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்களால் பிடிபட்டுள்ளார். இதன் மதிப்பு சுமார் 1,300 டாலர், இந்திய ரூபாயில் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் ஆகும். சந்தேகத்திற்குரிய நடத்தை காரணமாக போலீசார் வரவழைக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அணிந்திருந்த பாடி கேம் மூலம் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த பெண் போலீசர்களிடம், “நான் இந்த நாட்டை சேர்ந்தவள் அல்ல. தயவு செய்து மன்னியுங்கள். பொருட்களுக்கு பணம் கொடுத்து விடுகிறேன்” என்று கெஞ்சுகிறார். அதற்கு போலீஸ் அதிகாரி ஒருவர், “இந்தியாவில் திருட அனுமதி உண்டா?” என்று கேட்பது இப்போது பலரையும் வெட்கப்பட வைத்துள்ளது.
இந்த சம்பவம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிலர் செய்யும் தவறுகள், மொத்தமாக இந்திய சமூகத்தின் நற்பெயரை பாதிக்கும் என்ற ஆதங்கம் பல இடங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதன் பின்னணியில், இந்தியர்களுக்கு அமெரிக்க தூதரகம் ஒரு கடும் எச்சரிக்கையை அறிவித்துள்ளது. “அமெரிக்காவில் திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களில் இந்தியர்கள் ஈடுபட்டால், விசா ரத்து செய்யப்படும். அது மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு மீண்டும் நுழைய கூட தடைகள் ஏற்படும்” என்று தூதரகம் தெரிவித்துள்ளது. முக்கியமாக, குற்றச்செயல்களில் சிக்குபவர்கள் H-1B விசா புதுப்பித்தல், கிரீன் கார்டு விண்ணப்பம் போன்றவற்றிலும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். விசா ரத்து செய்யப்பட்டால் அமெரிக்காவில் தங்குவதும் சட்டபூர்வமானதல்ல, நாடு கடத்தப்படும் அபாயமும் அதிகம். இதனால் அமெரிக்கா வாழும் இந்தியர்கள், வெளிநாட்டில் வாழும் போது தங்கள் நாட்டின் மானத்தை காக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சட்டங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டுமென்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.