விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நெல்லை மண்டல ஆலோசனை கூட்டம், கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் சாதாரண ஆலோசனைக் கூட்டமாகவே கருதப்பட்ட இந்த நிகழ்வு, கட்சி உள்ளமைப்புக்கும் அதன் தலைமை மீதான நம்பிக்கைக்கும் கேள்விக்குறி எழுப்பும் வகையில் முடிந்தது. திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீண்ட நேரம் உரையாற்றினார். அவரது உரையை கட்சித் தொண்டர்கள் ஆர்வமின்றி கேட்டனர். சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக அரங்கத்தை விட்டு வெளியேறினர். இந்த நிலைமை, அரங்கில் 50% மேற்பட்ட இருக்கைகள் காலியாகும் அளவுக்கு சென்றது. இந்நிலையில், செய்தியாளர்கள் காலியான இருக்கைகள் மற்றும் வெளியேறும் தொண்டர்களை பதிவு செய்ய முற்பட்டனர். இதனால் கோபமடைந்த வைகோ, மேடையில் நின்று “எங்கே எழுந்து செல்கிறீர்கள்?” என்று கேட்டு, செய்தியாளர்களை வெளியேற்றுமாறு தொண்டர்களிடம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், செய்தியாளர்களின் கேமராவை பறிமுதல் செய்யவும் அவர் உத்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சில மதிமுக தொண்டர்கள், மது போதையில் செய்தியாளர்களை தாக்கினர். இதில் தமிழ் ஜனம் உள்ளிட்ட ஊடகங்களுக்கு சொந்தமான பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர். ஒருவருக்கு தலையில் வீக்கம் ஏற்படுமளவு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசார் தலையீடு செய்து ஊடகவியலாளர்களை பாதுகாப்பாக வெளியே அனுப்பினர். இந்த சம்பவம் ஊடக உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்த, பத்திரிகையாளர் சங்கங்கள் வைகோவின் நடவடிக்கையை கண்டித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தாக்குதல் நடத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. வைகோவின் நடவடிக்கைகள், பத்திரிகை சுதந்திரத்திற்கு ஒரு சவாலாக கருதப்படுகிறது.