பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது கடந்த ஆண்டில், அவரது முன்னாள் துணை நடன இயக்குநராக பணியாற்றிய பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில், ஜானி மாஸ்டர் தன்னை மைனராக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் தெரிவித்து உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், குறிப்பாக 376 (பாலியல் வன்புணர்வு), 506 (அதிகாரமற்ற மிரட்டல்) மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஜானி மாஸ்டர் கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி பெங்களூரில் கைது செய்யப்பட்டார். அவர் ஒரு மாதம் சிறையில் இருந்த பிறகு இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் இருக்கும் போது கூட திரைப்படத்துறையில் அவருக்கான வேலை வாய்ப்புகள் வந்த வண்ணமே இருந்தன. தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் “எல்.ஐ.கே” திரைப்படத்தில் ஜானி மாஸ்டர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜானி மாஸ்டருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, “எல்.ஐ.கே குழு உங்களையும் உங்கள் வேலைபாடுகளையும் நேசிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஒருவர் மீதான பாராட்டும், வெளிப்படையான ஆதரவும் சமூக வலைதளங்களில் பலரின் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாடகி சின்மயி, விக்னேஷ் சிவனின் இந்த பதிவை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளார். “மையனருக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஜாமினில் வெளியே வந்த ஒருவரை இப்படியொரு முறையில் ஆதரிப்பது, அவரைப் போல இருக்கும் அனைத்து குற்றவாளிகளையும் ஆதரிப்பது போன்றது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சிதறும். குற்றவாளிகள் தங்களால் எதுவும் செய்யமுடியாது என்ற எண்ணத்தில் கர்வமாகச் சுற்றிதிரிவார்கள்” என சின்மயி குறிப்பிடப்பட்டுள்ளார்.