திருச்சி: வரும் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் களமாக அமைகிறது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இரண்டாவது மாநில மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களை உற்சாகப்படுத்த வரும் 13 ஆம் தேதியிலிருந்து பிரச்சாரத்தை நடிகர் விஜய் மேற்கொள்ள இருக்கிறார். திருச்சியில் இருந்து முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக “மக்களுடன் சந்திப்பு” என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் தவெக தலைவர் விஜய். முதற்கட்ட சுற்றுப்பயணம் 10 நாட்களுக்கு நீடிக்கும் என கூறப்படுகிறது.
முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் 10 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆதரவு கேட்க உள்ளார். 10 மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்களில் விஜய் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டுள்ளது. முக்கிய பகுதிகளுக்கு செல்லும் போது திறந்த வாகனங்கள் நின்றபடி பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுப்பயணத்திற்காக சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. சுற்றுப்பயணத்திற்கு சிறப்பு வாகனமானது சொகுசு மற்றும் அதிநவீன வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 13ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஸ்ரீரங்கத்திலிருந்து தனது பரப்புரையை ஆரம்பிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி திருச்சியில் இரண்டு இடங்களில் பரப்புரை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும், ஸ்ரீ ரங்கத்துடன் சேர்த்து மற்றொரு இடத்திலும் காவல்துறையிடம் அனுமதி பெற்று பிரச்சாரம் செய்ய உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.