தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ஆளும் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பையும் கடுமையாகச் சாடியுள்ளார். தன்னை அரசியலில் முடக்க இரு கட்சிகளும் ரகசியமாகச் செயல்படுவதாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“நாம மாறி மாறி வரலாம்”: மேடையில் ஆக்ரோஷமாகப் பேசிய விஜய், “ஒண்ணு நீ… இல்லன்னா நான்… நம்மைத் தாண்டி யாரும் வந்துவிடக் கூடாது… நாம் மாறி மாறி ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைத்தார்கள். ஆனால், இப்போது விஜய் வந்ததால் அவர்களுக்குத் தொல்லை ஏற்பட்டுள்ளது. மக்கள் வேறு அவனைத் தான் (தன்னை) நம்புகிறார்கள். அதனால், என்னைத் தடுக்க அவர்கள் இருவரும் கைகோர்த்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
“விதிமுறைகள் என்ற பெயரில் முட்டுக்கட்டை”: மேலும் அவர் கூறுகையில், “நீ விதிமுறைகள், சட்டங்கள் எனப் போட்டு அவனை (விஜய்யை) தடுத்துவிடு. நானும் பழி மேல் பழி போட்டு அவனைத் தடுக்கிறேன் என இரு கட்சிகளும் பேசி வைத்துக் கொண்டு எனக்குப் பிரச்சனை கொடுக்கிறார்கள்” எனத் திமுக மற்றும் அதிமுக மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தினார். 2026 தேர்தலில் தன்னை ஒரு வலுவான சக்தியாக மாற்ற விடாமல் தடுக்கப் பல சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
திராவிடக் கட்சிகள் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வுடன் செயல்படுவதாகவும், அந்தப் பிம்பத்தை உடைக்கவே தான் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் விஜய் பேசியது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் இந்தத் ‘நேரடித் தாக்குதல்’ தமிழக அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.


