தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விவசாயிகளின் மகத்துவத்தைப் போற்றும் வகையில் மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். அவரது இந்தப் பேச்சு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான டெல்டா விவசாயிகளின் கண்களைக் கலங்கச் செய்துள்ளது.
“விவசாயி மகனாக ஆசை”: மேடையில் தனது உரையைத் தொடர்ந்த விஜய், மறுபிறவி குறித்த தனது ஆசையை வெளிப்படுத்தினார். “மறுபிறவி, மறுஜென்மம் பத்தி எனக்குப் பெருசா தெரியாது. ஒருவேளை அது உண்மையா இருந்தா, அடுத்த பிறவில ஒரு விவசாயி மகனா பிறக்கணும்னு ஆசைப்படுறேன்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.
“விவசாயத்தின் வலி”: தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு விவசாயம் செய்யத் தெரியாது, ஆனா ஒரு விவசாயியின் வலி என்னன்னு எனக்குத் தெரியும். அந்த மண்ணையும், உழைப்பையும் நேசிக்கிற ஒரு குடும்பத்துல பிறக்கிறதே ஒரு பெரிய வரம்” எனத் தெரிவித்தார். ஏற்கனவே விவசாயிகளுக்கான பயிர் கடன் ரத்து மற்றும் இலவச உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அளித்திருந்த விஜய், இறுதியில் இப்படி எமோஷனலாகப் பேசியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திராவிடக் கட்சிகளின் கோட்டையான தஞ்சையில், வெறும் அரசியல் பேசாமல் மக்களின் உணர்வுகளோடு கலந்து விஜய் பேசிய விதம், 2026 தேர்தல் களம் விஜய்க்குச் சாதகமாகத் திரும்புவதைக் காட்டுகிறது. சினிமா நட்சத்திரமாகத் தெரிந்த விஜய், இப்போது டெல்டா மக்களின் குடும்பத்தில் ஒருவராகத் தன்னை முன்னிறுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


