புது டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் விராட் கோலியின் சாதனைகளும், ஃபார்மும் கிரிக்கெட் உலகில் இன்றும் விவாதப் பொருளாகவே இருக்கின்றன. குறிப்பாக, ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் என்ற சாதனையை அவர் முறியடித்த பிறகு, கோலியின் ஆதிக்கம் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
கோலியின் இந்த அபாரமான சாதனைகள் குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக், விராட் கோலியைப் புகழ்ந்து தள்ளி உள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அவர் தொடர்ந்து சதங்களை அடிப்பதன் பின்னணியில் இருக்கும் அவரது மனநிலையை ஷேவாக் சுட்டிக் காட்டினார்.
ஷேவாக் கருத்து: “விராட் கோலிக்கு 100 ரன்கள் மீது ஒருவிதமான போதை இருக்கிறது. மற்ற வீரர்கள் எல்லாம் 50 அல்லது 75 ரன்களைத் தாண்டியதும் நிதானித்து விளையாடுவார்கள். ஆனால், கோலி அப்படியல்ல. நாம் அனைவரும் அவர் எவ்வளவு சதங்கள் அடிப்பார் என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது, அவர் அதைச் சாதாரணமாக, அசால்ட்டாக அடித்து நொறுக்குகிறார். அவர் ஒவ்வொரு முறையும் அதை எளிதாகச் செய்வது போல் தோன்றுகிறது,” என்று ஷேவாக் வியந்தார்.
கோலி இருந்தால் எதுவும் சாத்தியமே
மேலும், இக்கட்டான சூழலில் இலக்குகளைத் துரத்துவதிலும், பெரிய ஸ்கோர்களை அடைவதிலும் கோலியின் பங்களிப்பு அளப்பரியது என்று அவர் பாராட்டினார்.
ஷேவாக் மேலும் கூறுகையில், “விராட் (கோலி) இருந்தால், எதுவும் சாத்தியமே என்று நான் நம்புகிறேன். அவர் மைதானத்தில் இருக்கும் வரை, எத்தனை ரன்கள் தேவை என்றாலும், இலக்கை அடைவது உறுதி என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கும், அணி வீரர்களுக்கும் அவர் அளிக்கிறார்,” என்று ஷேவாக் உறுதியாகக் கூறினார்.
கோலியின் உத்வேகம் மற்றும் சீரான ஆட்டம் இந்திய கிரிக்கெட்டின் பலம் என்றும் ஷேவாக் தெரிவித்தார்.


