வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியற்றவர்கள் என்று கூறி ஐந்து கோடி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினால் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொண்ட தேர்தல் ஆணையம் உரிய ஆவணம் சமர்ப்பிக்கவில்லை என்று 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுக்கள் நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபிவ் தேர்தல் ஆணையம் கேட்டுள்ள 11 ஆவணங்கள் ஏழைகளான பீகார் மக்களிடம் இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட சூரியகாந்த் பீகார் இந்தியாவின் ஒரு பகுதி என்றும், அந்த மாநிலத்தில் உள்ள மக்களிடம் ஆவணங்கள் இல்லை என்றால் மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான் இருக்கும் என கூறினார்.
பிறப்புச் சான்றிதழ், பள்ளி சான்றிதழ், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் சிலரிடம் தான் இருக்கும் என்று கபில் சிபிவ் தெரிவித்தார். ஆனால், ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணம் இருக்கும் தானே என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் பெரும்பாலான மக்கள் வைத்துள்ள ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்று கூறினார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் யார் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை என்று மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் மற்றும் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் குறித்த விவரங்களை விவரங்களை குறிப்பிடவில்லை என்றும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தேட முடியாத வகையில் உள்ளது என்று கூறினார். 4 ம் தேதி வரை பட்டியல் பார்க்கும் வகையில் இருந்ததாகவும் அதன் பிறகு காணவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்திய நாட்டின் குடிமகன் ஒருவர் தனது ஆவணத்தை தெரிந்து கொள்ள அரசியல் கட்சியை ஏன் அணுக வேண்டும் என கேள்வி எழுப்பினார் நீதிபதி. 2023 தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 5 கோடி வாக்காளர்களின் ஆவணங்களை அனுமானங்களின் அடிப்படையில் சந்தேகித்து குடியுரிமையை உறுதி செய்யும் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு வலியுறுத்த முடியாது என்று வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறினார்.