ஜமைக்கா: மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது 15 வருட கால சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு 37 வயதான ரஸ்ஸல் முற்றுப்புள்ளி வைக்கிறார்.
ரஸ்ஸல், தனது சொந்த மண்ணான ஜமைக்காவின் சபீனா பார்க்கில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி, சர்வதேச அரங்கில் இருந்து விடைபெறுவார் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் ரஸ்ஸல் சேர்க்கப்பட்டுள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது அபாரமான பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் மூலம் பல போட்டிகளை வெஸ்ட் இண்டீசுக்கு வென்று கொடுத்தவர் ஆண்ட்ரே ரஸ்ஸல். 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் அணி டி20 உலகக்கோப்பையை வென்றதில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானதாகும். 84 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரஸ்ஸல், 1078 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று அரை சதங்களும் அடங்கும். பந்துவீச்சில் 61 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
தனது ஓய்வு குறித்து ரஸ்ஸல் கூறுகையில், “மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும். சிறு வயதில் இந்த நிலையை அடைவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் விளையாட்டைக் காதலிக்க ஆரம்பித்தவுடன், எதை சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தேன். இது என்னை மேலும் சிறப்பாகச் செயல்படத் தூண்டியது, ஏனெனில் நான் வெஸ்ட் இண்டீஸ் ஜெர்சியில் ஒரு அடையாளத்தை விட்டுச் செல்ல விரும்பினேன், மற்றவர்களுக்கு உத்வேகமாக இருக்க விரும்பினேன்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ரஸ்ஸலின் ஓய்வு, அடுத்த ஏழு மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக வந்துள்ளது. அவரது ஓய்வு, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. அவரது அதிரடி ஆட்டமும், போட்டி முடிவுகளை மாற்றும் திறனும் ரசிகர்களால் எப்போதும் நினைவுகூரப்படும்.