இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தப் போகும் அணி எது என்ற எதிர்பார்ப்புக்கான விடை இன்று கிடைத்து விடும்.
தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பரபரப்பாக நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் நம்பர் ஒன் அணியான இந்தியா உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. பகல்- இரவு முதலாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி அதிரடியாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்துள்ளது.
அதையடுத்து இரண்டாவது அரையிறுதி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முன்னாள் சாம்பியன்களான நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
நியூசிலாந்து அணி ஏற்கனவே லீக் சுற்றில் ஏ பிரிவில் பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தை தோற்கடித்து இந்தியாவிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மிட்செல் சான்ட்னெர் கேப்டனாக உள்ள நியூசிலாந்து அணி ஏற்கனவே இதே கடாபி ஸ்டேடியத்தில் நடந்த முத்தரப்பு தொடரின் லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற்று இருந்தது. அப்போது இந்த அணி 305 ரன்கள் இலக்கை எட்டிப் பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தந்த கூடுதல் நம்பிக்கையுடன் நியூசிலாந்து அணியினர் தென்னாப்பிரிக்கா அணியினரை எதிர்கொள்வர்.
நியூசிலாந்திற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல தென்னாப்பிரிக்க அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தியுள்ளது. துரதிஷ்டமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானது. பவுமா தலைமையில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா வலுவானதாகவே உள்ளது. இந்த அணியில் ஒரு சிறிய மாற்றமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தின் போது வலது காலில் ஏற்பட்ட தசை பிடிப்பால் பாதியில் வெளியேறிய மார்க்ரம் இந்த போட்டியில் ஆடுவது சந்தேகம் என்பதால் அந்த அணிக்கு சுழற் பந்து வீசும் ஆல்- ரவுண்டரான ஜார்ஜ் லிண்டே தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
இந்த இரண்டு அணிகளும் இதுவரை சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 73 ஆட்டங்களில் நேருக்குநேர் மோதி உள்ளதில் 26 -இல் நியூசிலாந்து அணியும் 42 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவும் வெற்றிபெற்று உள்ளன. 5 ஆட்டங்கள் முடிவில்லை. அதேபோல சாம்பியன்ஸ் கோப்பையில் இரண்டு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன.
தென் ஆப்பிரிக்கா அணி;
ரையான் ரிக்கில்டன், வான்டெர் டஸன், பவுமா (கேப்டன்), டேவிட் மில்லர், மார்க்ரம் அல்லது லிண்டே, ஹென்றி கிலாசென், மார்கோ யான்சென், கேசவ் மகராஜ், வியான் முல்டெர், லுங்கி இங்கிடி, ககிசோ ரபடா,
நியூசிலாந்து அணி;
வில் யங், ரச்சின் ரவீந்தரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), கைல் ஜாமிசன், வில்லியம் ஓ ரூர்கே, கிளென் பிலிப்ஸ், மேட் ஹென்றி,
இன்று நடைபெற இருக்கும் அரைஇறுதி போட்டியில் வெற்றிபெறும் அணி வருகின்ற 9-ஆம் தேதி இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளது.





