மான்செஸ்டர்: இங்கிலாந்து – இந்தியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் வரும் ஜூலை 23 அன்று தொடங்கவுள்ளது. இந்தப் போட்டி இந்திய அணிக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். ஏனெனில், இந்த மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் போட்டி சாதனை மிகவும் பலவீனமாக உள்ளது.
இந்தியாவின் மோசமான சாதனை: ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரு வெற்றியையும் கூட இந்தியா பதிவு செய்யவில்லை. 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ள இந்தியா, மீதமுள்ள 5 போட்டிகளை டிரா செய்துள்ளது. 1936-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தப் போட்டிகளில், இந்தியா இரண்டு முறை இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, 1952-ல் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 207 ரன்கள் வித்தியாசத்திலும், 2014-ல் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா படுதோல்வி அடைந்தது. இது இந்திய அணிக்கு 89 ஆண்டுகால வெற்றி இல்லாத நிலையை குறிக்கிறது.
இங்கிலாந்தின் வலுவான ஆதிக்கம்:மறுபுறம், இங்கிலாந்து அணி ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மிகச் சிறந்த சாதனையைப் பெற்றுள்ளது. அவர்கள் இதுவரை 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 33 வெற்றிகளையும், 15 தோல்விகளையும், 36 டிராவுகளையும் பதிவு செய்துள்ளனர். இந்தியாவுக்கு எதிராக இந்த மைதானத்தில் இங்கிலாந்து ஒருபோதும் தோற்றதில்லை. 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இங்கிலாந்து, இந்தியாவுக்கு எதிராக இங்கு ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை. 2019 செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணி இந்த மைதானத்தில் எந்த டெஸ்ட் போட்டியிலும் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளிவிவரங்களின்படி, ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம் இங்கிலாந்துக்கு அப்பட்டமான சாதகமான மைதானம் என்பது தெளிவாகிறது. இந்திய அணி தங்கள் நீண்டகால தோல்வி வரலாற்றை மாற்றி, தொடரை சமன் செய்ய இந்தப் போட்டியில் பெரும் போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மைதானத்தின் தன்மை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.