பெய்ஜிங்: கொரோனா வைரஸ் மீண்டும் உலக நாடுகளில் பரவத் தொடங்கியுள்ள நிலையில், சீன ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தானது என அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
HKU5-CoV-2 என அழைக்கப்படும் இந்த வைரஸ், தற்போது வௌவால்களில் காணப்படுவதாகும். ஆனால், இதில் நிகழும் சிறிய மாற்றங்களே அது மனிதர்களுக்கு கடுமையான தொற்றினை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019இல் தொடங்கிய கொரோனா பெருந்தொற்றில் உலகம் முழுவதும் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு, பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன.
அந்த பருவத்தில் பல நாடுகள் தடுப்பூசி, ஊரடங்கு போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலமாக கொரோனாவை கட்டுப்படுத்தியிருந்தன. இருப்பினும், முழுமையான மீட்பு இன்னும் அடையப்படவில்லை. இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் HKU5-CoV-2 வைரஸை அடையாளம் கண்டுள்ளனர். இந்த வைரஸ், 2000களில் மத்திய கிழக்கு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்திய MERS வைரஸுடன் தொடர்புடையது எனவும், பாதித்தவர்களில் மூன்றில் ஒருவர் உயிரிழந்ததைப்போல் இது மிக ஆபத்தானது எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
HKU5-CoV-2 வைரஸின் ஸ்பைக் புரதத்தில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலே அது மனித செல்களில் உள்ள ACE2 ரிசெப்டர்களை பறிக்கும் திறன் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் தொண்டை, மூக்கு, வாயின் மூலமாக மனிதர்களிடையே பரவுவதற்கான வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது. அதே நேரம், இந்த வைரஸ் தற்போது வௌவால்களில் மட்டுமே பரவுகிறது. ஆனால் ஈரப்பதம் நிறைந்த சூழலில் விரைவாக இனப்பெருக்கம் செய்து, விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியதாக மாறும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட ஆசியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் உயரும் சூழலில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை வைரஸ் ஆராய்ச்சியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உலகளாவிய ஆரோக்கிய அமைப்புகளுக்கு புதிய சவாலாக மாறும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.





