சென்னையில் பெரும்பாலான மக்கள் Swiggy, Zomato போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிகள் மக்களுக்கு வீட்டில் சமைத்து சாப்பிடும் நேரத்தை சேமிக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த செயலிகள் விருப்பமான உணவை, வீடு தேடி வந்து டெலிவரி செய்யவும் உதவுகின்றன. ஆனால், இப்போது இந்த செயலிகள் ஒரு புதிய சிக்கலை எதிர்கொள்கிறது.
சமீபத்தில் நாமக்கல் பேக்கரி மற்றும் ஹோட்டல் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், swiggy மற்றும் zomato நிறுவனங்கள், அனைத்து உணவகங்களில் இருந்தும் ஒரே மாதிரியான கமிஷனை வசூலிப்பதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களுக்கு அவர்கள் செய்து தரும் உணவுக்கான பணத்தினை ஒரு வாரம் தாமதமாக Swiggy மற்றும் Zomato நிறுவனங்கள் தருகிறார்கள் என்று புகார் எழுந்துள்ளது. பணம் வர தாமதமாவதால் உணவக உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இதனை அடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் swiggy மற்றும் zomato மூலம் உணவு டெலிவரி சேவைகள் நிறுத்தப்படும் என அந்த மாவட்ட சங்கம் அறிவித்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கவலையை உருவாக்கி உள்ளது. மேலும், இந்தச் சிக்கலுக்கு உரிய தீர்வு கிடைக்காமல் போனால், சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் swiggy, zomato டெலிவரி சேவையை நிறுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் ரவி எச்சரித்துள்ளார். தற்போது, இந்த பிரச்சனையை தீர்க்க சென்னையில் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்பேச்சுவார்த்தை சமாதானமாக முடியவில்லை என்றால், Swiggy மற்றும் Zomato நிரந்தரமாக தடை செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.