பாங்காக்: தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளும் சுமார் 800 கிலோ மீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த நில எல்லை பகிர்வால் இரு நாடுகளுக்கு இடையே அடிக்கடி எல்லை தகராறு ஏற்பட்டு வருகிறது. கம்போடியாவில் கட்டுப்பாட்டில் தாமியூன் தோம் என்ற சிவன் கோயில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த கோவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயில் என்பதால் தாய்லாந்து உரிமை கோரி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மே மாதம் தாய்லாந்தின் சூரிய மற்றும் கம்போடியாவின் ஒடார் மீஞ்சி மாகாண எல்லையில் தாக்குதல்கள் தொடங்கியது. இரு நாட்டின் ராணுவ படையினர் மோதி கொண்டதில் கம்போடிய வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தாய்லாந்தின் காய்கறி மற்றும் பழங்கள் இறக்குமதிக்கு கம்போடியா தடை விதித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாய்லாந்து கம்போடியா உடனான எல்லை பகுதியை மூடுவதாக அறிவித்தது. தாய்லாந்தில் இருந்து கம்போடியா தூதரை வெளியேற்றும் படியும் கம்போடியாவில் இருந்து தாய்லாந்து தூதரை வெளியேற்றும் படியும் மாறி மாறி உத்தரவிட்டனர். சமீபத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் வெடித்த நிலையில் நான்கு நாட்களாக இருதரப்பினரும் மோதிக்கொண்டதில் 33 பேர் பலியாகி உள்ளன.
இதில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் எல்லை பகுதியிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் கம்போடிய பிரதமர் ஹன் மானெட் நிபந்தனையற்ற போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த அந்த நிலையில் தாய்லாந்து பிரதமர் பும்தம் வெச்சாயாச்சா நிராகரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இருநாட்டு தலைவர்களையும் தொலைபேசியில் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதில் வர்த்தக ஒப்பந்தத்தை தொடரப் போவதில்லை என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன் பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
இரு நாடுகளும் பயன்பெறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கம்போடியா பிரதமர் நன்றி கூறியுள்ளார். அழைப்பை ஏற்ற இரு நாட்டு தலைவர்களான பும்தம் வெச்சாயாச்சாய் மற்றும் கம்போடிய பிரதமர் ஹன் மானிட் ஆகிய இருவரும் மலேசியாவில் இன்று சந்தித்து பேச உள்ளனர். தாய்லாந்து மற்றும் கம்போடிய இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமைதி நிலை ஏற்படுமா என எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.