தமிழக அரசியலில் சமீப காலமாக பல்வேறு மாற்றங்களும், திருப்பங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் அரசியல் நிலை குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு பேச்சுக்கள் எழுந்துள்ளன. நீண்ட காலமாக அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்து வந்த செங்கோட்டையன், கட்சியின் உள்கட்டமைப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகினார். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் ஏற்பட்ட அரசியல் மோதல்களே அவர் கட்சியிலிருந்து விலக முக்கிய காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவில் ஆரம்ப காலத்திலிருந்தே செங்கோட்டையன் செயல்பட்டு வந்தவர். எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் செங்கோட்டையன். பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தார். சத்தியமங்கலம் மற்றும் கோபிச்செட்டிபாளையம் தொகுதிகளில் இருந்து மொத்தம் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பல முறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இதனால் தமிழக அரசியலில் அனுபவமிக்க தலைவர்களில் ஒருவராக செங்கோட்டையன் பார்க்கப்படுகிறார்.
அதிமுகவில் இருந்து விலகிய பிறகு, நடிகர் விஜய் தொடங்கிய தமிழ்நாடு வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். இவரின் இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் பெரிய கவனத்தை ஈர்த்தது. தனது நீண்ட அரசியல் அனுபவத்திற்கு தவெக-வில் மதிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் அவர் அந்த கட்சியில் இணைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தவெக கட்சியின் அமைப்பில் அவருக்கு எதிர்பார்த்த அளவு பங்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், தவெக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) இடையே அரசியல் கூட்டணி அமையபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடப்பாடியை எதிர்த்து அதிமுகவிலிருந்து விலகிய நிலையில், மீண்டும் அதே அரசியல் வட்டாரத்தில் சேர வேண்டிய சூழ்நிலை உருவாகுமா என்ற குழப்பம் செங்கோட்டையன் -க்கு உருவாகி உள்ளது.
இதனால், அவர் தற்போதைய கட்சியிலேயே தொடர்வாரா அல்லது புதிய அரசியல் முடிவை எடுப்பாரா? என்பது வருங்காலத்தில் தெளிவாகும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


