தமிழக அரசியல் களத்தில் புதிய பரிணாமங்களை உருவாக்கும் வகையில், தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தனது கொள்கைகளை மக்களிடம் விரிவாக அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சேலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையேற்கிறார். கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் மாவட்டத் தலைவர்கள், மண்டல பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் என அனைவரும் கலந்துகொண்டு மக்கள் இடையே தவெக கொள்கைகளை பரப்ப வேண்டியுள்ளது. தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானப்படி, தமிழக முழுவதும் 5 மண்டலங்கள், 120 நிர்வாக மாவட்டங்கள் மற்றும் 12,500 கிளைகளில் ஒரே மாதிரியான கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக சேலத்தில் இன்று நடைபெறும் கூட்டம் குறிப்பிடத்தக்கது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி தலைவர் விஜய் கடைசி நேரத்தில் பங்கேற்று தொண்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார். அதே மாதிரி, இன்று நடைபெறும் முதல் பொதுக்கூட்டத்திலும் விஜய் பங்கேற்பாரா என்று கட்சி தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கட்சியின் வட்டார தகவல்களின்படி, விஜய் இந்நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளராக கருதப்படும் விஜய் நேரடியாக விழாவில் பங்கேற்றால், தவெக களத்தில் பெரிய அதிர்வலை ஏற்படும் என்று கட்சி தரப்பில் நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எல்லா கண்களும் இன்று மாலை சேலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தையே நோக்கி இருக்கின்றன. விஜய் மேடையில் தோன்றுவாரா? மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா? என்பதை அறிய இன்னும் சில மணிநேரங்களுக்குள் தெளிவாகும்.