திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள முஸ்லிம் நகரைச் சேர்ந்த லோகேஸ்வரி (24) என்ற பட்டதாரி இளம்பெண், காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருடன் அண்மையில் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் 27ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதன் மூலம் புதிய வாழ்க்கைக்கு அடி எடுத்த லோகேஸ்வரி, தன் கணவர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ விரும்பினார். ஆனால் திருமணமான சில நாட்களிலேயே அவரின் கனவுகள் சிதைந்தன. தன் கணவர் பன்னீர் மற்றும் அவரது குடும்பத்தினர், அதிகமான வரதட்சணையை கோரி தொடர்ந்து லோகேஸ்வரியை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் 10 சவரன் நகை கேட்டு, அதில் 4 சவரன் மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நகையை விரைவில் வாங்கி தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதேபோல் சீர்வரிசை பொருட்கள், பைக்கும் பெற்றோரால் வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஏற்கனவே உள்ள மூத்த மருமகள் 12 சவரன் நகை கொண்டு வந்ததாக கூறி, அதேபோல் நீயும் அதிக நகை கொண்டு வர வேண்டும் என லோகேஸ்வரியை கணவர் குடும்பத்தினர் அடிக்கடி கேலி செய்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. பாக்கியுள்ள நகையுடன் கூடுதலாக வீட்டிற்கு ஏசி வாங்கி தருமாறு வற்புறுத்தியதும் கூறப்படுகிறது. வீட்டில் காலையில் எழுந்தவுடன் துணி துவைக்க வேண்டும், பாத்திரம் கழுவ வேண்டும், சோபாவில் கூட அமரக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்து லோகேஸ்வரியை கொடுமை செய்ததாக அவரது தாய் மற்றும் தங்கையிடம் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த லோகேஸ்வரி, நேற்று இரவு வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் கழித்து அங்கே சென்று பார்த்த குடும்பத்தினர் அவளை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டனர். உடனே லோகேஸ்வரியை கீழே இறக்கி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், டாக்டர்கள் லோகேஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். லோகேஸ்வரியின் மரணம் அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோகேஸ்வரியின் மரணம் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவரது கணவர் பன்னீர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கு தூண்டியவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.