திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நர்கீஸ் என்ற இளம் பெண், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த வரதட்சணை கொடுமையின் காரணமாக இரு கால்களையும் இழந்து, வேலூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். சோழவரம் காவல்துறையில் எஸ்ஐயாக பணிபுரியும் பாபாவின் மகன் காஜா ரவீக்கை நர்கீஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். திருமணத்துக்கு நர்கீஸ் பெற்றோர் 30 பவுன் நகையும், 10 லட்சம் ரூபாய் பணமும் வழங்கினர். ஆனால், கணவரின் பண ஆசை குறையாமல் தொடர்ந்து வரதட்சணை கேட்டு நர்கீஸை அடித்தும், துன்புறுத்தியும் வந்துள்ளார். வரதட்சணை தரவில்லை எனக் கூறி கணவர் இரும்பு ராட்டினால் தாக்கி, விரல்களை காலால் மிதித்து நசுக்கியதாக நர்கீஸ் கூறியுள்ளார். புகார் சொல்லக்கூடாது என வீட்டில் பூட்டி வைத்து வைக்கப்பட்டுள்ளார். தாய் தந்தைக்கு தகவல் சொன்னதை காரணமாகக் கொண்டு, கடந்த மாதம் மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டார். இதில் நர்கீஸின் இரண்டு கால்களும் உடைந்து, இடுப்புப் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நர்கீஸை அவரது கணவர் மற்றும் மாமியார் சந்தித்து, “நடந்ததை வெளியே சொன்னால் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம். நாங்கள் போலீஸ் குடும்பம். உன் பெற்றோர்களையும் விட்டு வைக்கமாட்டோம்” என மிரட்டியதாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவ படுக்கையில் இருந்து நர்கீஸ், “என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக அரசிடம் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் மட்டுமல்லாமல், ஒரே வாரத்தில் கேரளாவில் மட்டும் இரண்டு பெண்கள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உத்தரப்பிரதேசம் ஹரித்வார் மாவட்டத்தில் கூட ஒரு மாமியார் தனது மருமகளுக்கு HIV ஊசி செலுத்தி கொடுமை செய்த சம்பவமும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.