மும்பை: மராட்டியத்தில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் மாதந்தோறும் 1500 நிதி உதவியை பெண்களுக்கு வழங்க “லாட்கி பகின்” திட்டம் அமலுக்கு வந்தது. தேர்தலை ஒட்டி அவசரத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தினால் பயனாளர்களின் முழு விவரங்களையும் சரியாக ஆய்வு செய்யப்படாமல் இருந்ததால் தற்போது இந்த திட்டத்தில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லாட்கி பகின் திட்டத்தில் மட்டும் 14,298 ஆண்கள் மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் துணை முதல்வர் மந்திரி அஜித்பவார் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறினார். பெண்களுக்கான திட்டத்தில் நிதியுதவி பெற்ற ஆண்கள் இடமிருந்து உதவித்தொகை திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தில் தகுதி இல்லாமல் 26.3 லட்சம் பயனாளர்கள் நிதி உதவி பெற்று வந்துள்ளனர் என மந்திரி அதிதி தட்காரே தெரிவித்தார். பெண்கள் நலத்துறை திட்டமான “லாட்கி பகின்” திட்டம் குறித்து பயனாளர்களின் முழு விவரங்களை ஆய்வு செய்து வருகின்றன. இதில் வருமான துறையிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் மூலம் தகுதியில்லாத 26.3 லட்சம் பெண்கள் நிதி உதவி பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.
அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டாலும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர் சரிபார்த்த பின் தகுதி உள்ளவர்கள் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்படுவார் என தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளார் அதிதி தட்காரே.