தமிழ் சினிமாவில் எதார்த்தமான கதைகளை இயக்கிப் புகழ்பெற்ற மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் கடைசிப் படைப்பான ‘கெணத்த காணோம்’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது. ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சுரேஷ் சங்கையா, மறைவதற்கு முன்பு இந்தப் படத்தின் பணிகளை முடித்திருந்தார்.
நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரை, நடிகர் கார்த்தி நாளை (மார்ச் 6) தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளார்.
இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர் மற்றும் ‘ஜெய்பீம்’ புகழ் ரேச்சல் ரெபேக்கா ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் சங்கையாவின் முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் கிராமத்து பின்னணியில் நகைச்சுவை மற்றும் சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
ஒரு கிணறு காணாமல் போவதைச் சுற்றி நடக்கும் சுவாரசியமான சம்பவங்களே படத்தின் கதைக்களம் எனத் தெரிகிறது. இயக்குனரின் மறைவுக்குப் பிறகு வெளியாகும் இந்தப் படம், அவருக்குச் சமர்ப்பணம் செய்யும் விதமாக அமையும் எனத் திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.


