வேலூர் மாவட்டம் குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாரத் (36) சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த நந்தினியை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 4 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், வீட்டுக்கு எதிரே வசிக்கும் சஞ்சய் (21) என்பவருடன் நந்தினிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளக்காதல் தொடர்ந்தது. இதை அறிந்த பாரத், மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பாரத் கடந்த ஜூலை 21ம் தேதி விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். மாலை நேரத்தில் நந்தினி, கணவரை கடைக்கு அழைத்து சென்றார்.
அப்போது சஞ்சய் மற்றும் சிலர் சாலையில் காத்திருந்து பாரத்தை தாக்கி கொலை செய்தனர். கொலை நடந்தபோது பாரத்துடன் இருந்த அவரின் 3 வயது மகள், போலீசாரிடம் “சஞ்சய் மாமாதான் அப்பாவை வெட்டினார்” என கூறி உண்மையை வெளிப்படுத்தியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து நந்தினியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை கடுமையாக விசாரித்த போது கள்ளக்காதலும் கொலை திட்டமும் அம்பலமானது. தப்பிச் சென்ற சஞ்சயையும் போலீசார் சில மணி நேரத்தில் கைது செய்து கொண்டு வந்தனர். விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இந்த கொலை வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் என்ற பெயரில் ஒரு குடும்பத்தின் தூண் விழுந்து விட்டது. இரண்டு குழந்தைகள் தந்தையையும் தாயையும் இழந்து தவிக்கின்றனர்.