துபாய்: ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில், பரம எதிரியான பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 9வது முறையாக கோப்பையை வென்றது. இந்த வரலாற்று வெற்றியில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று, வெற்றிக்கு வித்திட்டவர் இளம் வீரர் திலக் வர்மா ஆவார்.
147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்தது. டாப் ஆர்டர் வீரர்கள் அபிஷேக் ஷர்மா (5), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (1), ஷுப்மன் கில் (12) என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 4 ஓவர்களில் 20/3 என்ற பரிதாப நிலையில் தடுமாறியது.
இந்த மிகக் கடுமையான நெருக்கடியான சூழலில், 22 வயதான இடதுகை ஆட்டக்காரர் திலக் வர்மா களமிறங்கினார். பதற்றப்படாமல், நிதானத்துடனும், துணிச்சலுடனும் ஆடிய அவர், விக்கெட்டுகள் விழுந்த போதும் தளரவில்லை. சஞ்சு சாம்சன் (24) உடன் இணைந்து 57 ரன்கள் சேர்த்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு, சிவம் துபே (33) உடன் கைகோர்த்து 60 ரன்கள் என்ற மிக முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்.
திலக் வர்மா 41 பந்துகளில் தனது முக்கியமான அரை சதத்தைப் பதிவு செய்தார்.
53 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 பவுண்டரிகள் மற்றும் 4 பிரம்மாண்ட சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார்.
சிவம் துபே ஆட்டமிழந்த பிறகு, இந்தியாவுக்கு வெற்றி பெற கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய ஹாரிஸ் ரவுஃபின் முதல் பந்தை ஒரு சிக்ஸருக்குப் பறக்கவிட்டு, வெற்றி வாய்ப்பை இந்தியாவின் பக்கம் திருப்பினார் திலக் வர்மா. பின்னர், ரிங்கு சிங் ஒரு பவுண்டரியை அடித்து 19.4 ஓவர்களிலேயே வெற்றியை உறுதி செய்தார்.
ஆட்ட நாயகன் விருது:
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற திலக் வர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 113/1 என்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், குல்தீப் யாதவின் அபார சுழற்பந்துவீச்சால் (4/30), கடைசி 9 விக்கெட்டுகளை வெறும் 33 ரன்களுக்கு இழந்து, பாகிஸ்தான் 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
திலக் வர்மாவின் இந்த வீரமான இன்னிங்ஸ், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


