தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சியும் தங்களது பலத்தை நிரூபிக்க வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரக் கணக்கு அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதிமுக கூட்டணி 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
41% லிருந்து 62% வரை – உதயகுமாரின் லாஜிக்: சமீபத்தில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆர்.பி. உதயகுமார், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வாங்கிய வாக்குகள் மற்றும் என்.டி.ஏ (NDA) கூட்டணியில் இருந்த கட்சிகளின் வாக்குகள் என அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஏற்கனவே 41% வாக்கு வங்கி பலமாக இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய அடிப்படை” என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்போது ஆளுங்கட்சியான திமுக-வின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற காரணங்களால் ‘ஆளுங்கட்சி எதிர்ப்பு அலை’ (Anti-Incumbency) தீவிரமாக வீசுகிறது. இந்த அலை 2026 தேர்தலில் சுமார் 21% வாக்குகளை அதிமுக பக்கம் திருப்பும். ஆக மொத்தம் 41% + 21% = 62% வாக்குகளைப் பெற்று அதிமுக அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்” என்று கணக்குப் போட்டுள்ளார்.
திமுக-வுக்கு விழுந்த ‘செக்’: திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவை தேர்தலுக்கு முன்னதாக அதிமுக பக்கம் வர வாய்ப்புள்ளதாகவும் ஒரு பேச்சு அரசியல் வட்டாரத்தில் அடிபடுகிறது. இதை மறைமுகமாகக் குறிப்பிட்ட உதயகுமார், “62% வாக்கு என்பது வெறும் இலக்கமல்ல, அது எடப்பாடியார் தலைமையிலான அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளம்” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.





